வெள்ளி, 11 ஜூன், 2010

மெலினா

ஒரு சிறுவன் பதிண் பருவத்தை எட்டிப்பார்க்கும் வேளையில்,அவனிடம் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிச் சொல்லும் படம் மெலினா.அவனே கதை சொல்லி.நல்லவேளையாக முழுக்கதையையும் அவனே சொல்லுவது போல படம் அமையவில்லை.சில இடங்களில் மட்டும் அவன் கதை சொல்லியாகச் செயல்படுகிறான்.பதிண் பருவத்தில் இயல்பாய் ஏற்படும் பாலுறவு இச்சை,சமூக அதிகாரத்தால் மறுக்கப்படும் வேளையில் பீறிடுகிறது.அப்படிப் பீற்டும்போது அதன் வேகம் இயல்பாய் மட்டுப்பட்டுப் பின் சீராகும் வரை உள்ள நிகழ்வை ஒரு திரைப்படமாகச் சொல்லியிருக்கிறார்கள்.மிகவும் சிக்கலான ஓர் விஷயத்தை மிக லாவகமாகக் கையாண்டு இருக்கிறர்கள்.பாலுறவுச் சிக்கல்களை அறிவின் துணயுடன் இயல்பாய்க் கடக்கும் ஒரு விஷ்யம் மட்டுமல்லாமல் போர் முடிந்ததும் ஊனமுற்ற போர்வீரனை நிராகரித்தல்,ஆணாதிக்க உலகத்தில் பெண்கள் உணவுக்காக தன்னை விற்கும் நிலை,அதிகாரம் கைமாறும் வேளையில் கீழே விழும் சக மனிதனை ஏறிமிதிக்கும் வக்கிரம் என பன்மைத்தன்மையுடன் விரிந்து பரவுகிறது.படத்தில் ஓரிடத்தில் கூட நல்லவன்,கெட்டவன் என்று தரம் பிரிக்கவில்லை.கதை நடக்கும் காலம் இரண்டாம் உலகப்போரின் காலம்.களம்-இத்தாலி.இது முசோலினியின் பாசிசக் கொள்கைகளை மறைமுகமாய்ச் சாடுகிறது.முசோலினியின் அதிகாரம் பெண்களுக்கு எதிரான அதிகாரப் படிமமாகக் கொள்ளலாம்.அப்பாவிடம் அடி வாங்கும் சிறுவன் பாசிசம் வீட்டிலும் நடப்பதாகக் கூறுகிறான்.அப்பா முசோலினியின் தலை உடைந்தபின் உனக்கு முழுக்கால் சட்டை வாங்கித் தருவதாகக் கூறுகிறார்.வகுப்பறையிலிருந்து வெளியேற்றும் ஆசிரியை மீது உள்ள கோபத்தால் முசோலினியின் தலையை சிறுவன் உடைக்கிறான்.மூன்று நாட்களாகச் சாப்பிடாத மகனுக்காக பரிந்து பேசும் அன்னையிடம் சோவியத் யூனியனிலும் யாரும் சாப்பிடுவதில்லை என்று கிண்டலடிக்கிறார்,அப்பா.

அந்தந்த காலக்கட்டத்தில் உள்ள சமூக விழுமியங்களை மனிதன் சுவீகரித்துக்கொண்டு அதன் வழியே உலகைக் காண்கிறான்.அதிலிருந்து விலகும் மனிதனை சமூக எதிரியாகக் கருதுகிறான்.அவனே சமூக விழுமியங்களை ஏற்கும்போது அவனை மன்னித்து தனது சமூகத்துடன் கருணையுடன் இணைத்துக் கொள்கிறான்.படத்தின் முற்பாதியில் வரும் அறியாச்சிறுவனாய் வருபவன் பின்னர் பக்குவப்பட்ட மனநிலையில் வரும்போதும் முகபாவங்களால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறான்.மெலினாவாக வரும் மோனிகா பொலோச்சிக்கிகு பெரும்புகழ் பெற்றுத்தந்த படமிது.கிராமத்துப் பெண்கள் ஒன்று சேர்ந்து அடிக்கும்போது அழுகயும்,அவமானமும் முகத்தின் வழியாக மட்டுமல்லாமல் உடல்மொழியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் அதிகம் உரையடுவதில்லை.உரையாடல்கள் பெரும்பாலும் பொது இடங்ககளில் குழுவாகப் பேசுவதாகவே அமைந்துள்ளன,அல்லது கதைசொல்லியின் கண்களின் வழியே விரிகின்றன.படம் முடியும்போது கடிகாரம் இரவு மணி இரண்டு என்றது.காலையில் சீக்கிரம் எழ வேண்டும்.விஜயின் 'சுறா'படத்துக்கு டிக்கெட் வாங்கி வைத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக