ஞாயிறு, 31 அக்டோபர், 2010

போர்


உனக்கும் எனக்குமான
போரினில்
நான் வெல்லும்
தருவாயில் இருக்கிறேன்.
தூரத்தில் நீ தூக்கிப்பிடிக்கும்
வெள்ளைக்கொடியை
அசைக்கும் காற்று
என் நாசியில்
ரத்த வாடையை
வீசிவிட்டுச் செல்கிறது.
என்னால்
உன்னை நோக்கி
முன்னேற இயலாது.
வழியெங்கும் பல்லாயிரம்
பிணக்குவியல்கள்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அன்புள்ள பத்ரி,
நீங்கள் சிங்கப்பூர் வரும்போது உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அலுவல் காரணமாக சந்திக்க இயலவில்லை.நீங்கள் கூறுவது உண்மைதான்.புத்தங்களை இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் கொண்டுவருவது சவாலான விஷயந்தான்.நான் சென்னையிலிருந்து வரும் வேளையில் 30கிலோ புத்தகங்கள் கொண்டுவந்தேன்.பல புத்தகங்கள் விற்கின்றன சில விற்பதில்லை.குறைந்த அளவு லாபம் மட்டுமே கிடைக்கிறது.நான் சிங்கப்பூரில் புத்தக வியாபாரம் செய்ய முயன்றுள்ளேன்.100 ரூபாய் புத்தகத்தை $5க்கு கொடுத்தேன்.ஆனால் இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்ய கடை வாடகை மின்சாரம் என நிறைய செலவு செய்ய வேணியுள்ளது.மேலும் இங்கு தமிழ் புத்தகம் வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள்.சிங்கப்பூரர்கள் நாடுவது பெரும்பாலும் அரசியல் மற்றும் ஆன்மீகப் புத்தகங்கள் மட்டுமே.வாசிப்பவர்கள் குறைவாக இருப்பதாலும் பரவலாக இருப்பதாலும் ஓரிடத்தில் வியாபாரம் செய்தால் அவர்களை அடைவது கடினம்.தேக்காவில் உள்ள கடைகளில் புத்தகங்கள் மட்டும் விற்பதில்லை.அவர்கள் மளிகை,தொலைபேசி அட்டை இவற்றுடன் சேர்த்தே விற்கிறார்கள்.தனியாக விற்க இயலாது.எனக்குத் தெரிந்த சீன நண்பர் ஒருவர் சீனப் புத்தகங்களுக்காக ஒரு கடை ஒன்றை ஆரம்பித்தார்.சில மாதங்களிலேயே அந்தக்கடை வாடகையைக் கூடக் கொடுக்க முடியாமல் மூடி விட்டு தற்போது வேறு வியாபாரம் செய்கிறார்.மலாய்ப் புத்தகங்களின் நிலை தமிழை விட மோசம்.இங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களையே விரும்புகின்றனர்.அவற்றையும் நூலகத்தில் படித்து விடுகின்றனர்.ஈரண்டுகளுக்கொருமுறை தேசிய நூலகம் பழைய புத்தகங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்கிறது.தமிழ் புத்தகங்களின் விலை $1 ஆங்கிலம் $2.நான் தேக்காவில் உள்ள கடைகளில் எனது புத்தகங்களை கொடுக்க அவர்களை அணுகும்போது அவர்கள் என்னை திருக்குறளை மனப்பாடம் செய்யச் சொல்லும் வாத்தியாரிடம் காட்டும் விரோதத்தை காட்டுகின்றனர்.(சில கடைக்காரர்களை பார்க்கும் போது சிங்கப்பூரில் பிச்சைக்காரர்கள் இல்லாதது குறித்து
சந்தோஷம் வருகிறது.)

பத்ரி ஷேஷாத்ரியின் சிங்கப்பூர் குறித்தான http://thoughtsintamil.blogspot.com/2010/05/6.html#comments என்ற இடுகைக்கு எனது கருத்து.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

துரோகம்

நெடுநாளாய்த் தேடிய
பழம் ஒன்று
சோம்பல் பொங்கும்
ஞாயிறொன்றின்
பகல் பொழுதில்
சட்டென
வெளிப்பட்டது.
தன்னைப் புசிக்கச்
சொல்லி
மண்டியிட்டு மன்றாடியது.
வேட்கையின் ரேகை
முகத்தில் படர
புசிக்கத் துவங்கியதும்
நெஞ்சை நனைத்தது
எச்சில்,
தாடை,
கழுத்தென
எல்லைகள் கடந்து.
சுவையில் முயங்கிப்
புசிக்கப் புசிக்கப்
வேட்கையுடன்
பழமும்
கைகோர்த்து
வள்ர்ந்தன.
என்னுயரம் தாண்டி
கூரை கிழித்து
விஸ்வரூபித்ததும்,
என்னைப்
புசிக்கத்
துவங்கியது.
வெள்ளி, 11 ஜூன், 2010

மெலினா

ஒரு சிறுவன் பதிண் பருவத்தை எட்டிப்பார்க்கும் வேளையில்,அவனிடம் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிச் சொல்லும் படம் மெலினா.அவனே கதை சொல்லி.நல்லவேளையாக முழுக்கதையையும் அவனே சொல்லுவது போல படம் அமையவில்லை.சில இடங்களில் மட்டும் அவன் கதை சொல்லியாகச் செயல்படுகிறான்.பதிண் பருவத்தில் இயல்பாய் ஏற்படும் பாலுறவு இச்சை,சமூக அதிகாரத்தால் மறுக்கப்படும் வேளையில் பீறிடுகிறது.அப்படிப் பீற்டும்போது அதன் வேகம் இயல்பாய் மட்டுப்பட்டுப் பின் சீராகும் வரை உள்ள நிகழ்வை ஒரு திரைப்படமாகச் சொல்லியிருக்கிறார்கள்.மிகவும் சிக்கலான ஓர் விஷயத்தை மிக லாவகமாகக் கையாண்டு இருக்கிறர்கள்.பாலுறவுச் சிக்கல்களை அறிவின் துணயுடன் இயல்பாய்க் கடக்கும் ஒரு விஷ்யம் மட்டுமல்லாமல் போர் முடிந்ததும் ஊனமுற்ற போர்வீரனை நிராகரித்தல்,ஆணாதிக்க உலகத்தில் பெண்கள் உணவுக்காக தன்னை விற்கும் நிலை,அதிகாரம் கைமாறும் வேளையில் கீழே விழும் சக மனிதனை ஏறிமிதிக்கும் வக்கிரம் என பன்மைத்தன்மையுடன் விரிந்து பரவுகிறது.படத்தில் ஓரிடத்தில் கூட நல்லவன்,கெட்டவன் என்று தரம் பிரிக்கவில்லை.கதை நடக்கும் காலம் இரண்டாம் உலகப்போரின் காலம்.களம்-இத்தாலி.இது முசோலினியின் பாசிசக் கொள்கைகளை மறைமுகமாய்ச் சாடுகிறது.முசோலினியின் அதிகாரம் பெண்களுக்கு எதிரான அதிகாரப் படிமமாகக் கொள்ளலாம்.அப்பாவிடம் அடி வாங்கும் சிறுவன் பாசிசம் வீட்டிலும் நடப்பதாகக் கூறுகிறான்.அப்பா முசோலினியின் தலை உடைந்தபின் உனக்கு முழுக்கால் சட்டை வாங்கித் தருவதாகக் கூறுகிறார்.வகுப்பறையிலிருந்து வெளியேற்றும் ஆசிரியை மீது உள்ள கோபத்தால் முசோலினியின் தலையை சிறுவன் உடைக்கிறான்.மூன்று நாட்களாகச் சாப்பிடாத மகனுக்காக பரிந்து பேசும் அன்னையிடம் சோவியத் யூனியனிலும் யாரும் சாப்பிடுவதில்லை என்று கிண்டலடிக்கிறார்,அப்பா.

அந்தந்த காலக்கட்டத்தில் உள்ள சமூக விழுமியங்களை மனிதன் சுவீகரித்துக்கொண்டு அதன் வழியே உலகைக் காண்கிறான்.அதிலிருந்து விலகும் மனிதனை சமூக எதிரியாகக் கருதுகிறான்.அவனே சமூக விழுமியங்களை ஏற்கும்போது அவனை மன்னித்து தனது சமூகத்துடன் கருணையுடன் இணைத்துக் கொள்கிறான்.படத்தின் முற்பாதியில் வரும் அறியாச்சிறுவனாய் வருபவன் பின்னர் பக்குவப்பட்ட மனநிலையில் வரும்போதும் முகபாவங்களால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறான்.மெலினாவாக வரும் மோனிகா பொலோச்சிக்கிகு பெரும்புகழ் பெற்றுத்தந்த படமிது.கிராமத்துப் பெண்கள் ஒன்று சேர்ந்து அடிக்கும்போது அழுகயும்,அவமானமும் முகத்தின் வழியாக மட்டுமல்லாமல் உடல்மொழியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் அதிகம் உரையடுவதில்லை.உரையாடல்கள் பெரும்பாலும் பொது இடங்ககளில் குழுவாகப் பேசுவதாகவே அமைந்துள்ளன,அல்லது கதைசொல்லியின் கண்களின் வழியே விரிகின்றன.படம் முடியும்போது கடிகாரம் இரவு மணி இரண்டு என்றது.காலையில் சீக்கிரம் எழ வேண்டும்.விஜயின் 'சுறா'படத்துக்கு டிக்கெட் வாங்கி வைத்துள்ளேன்.